அன்னையின் மடியில் ஆறுமுகம்-நவராத்திரி திருவிழா

பார்வதி தேவி,” ஸ்கந்த மாதா வாக” கொண்டாடப்படும் துர்க்கா பூசையில்,மாதா தன் மடியில்,ஆறுமுகனை அணைத்துக் கொண்டு,அமர்ந்திருக்கும் காட்சி, மேற்கு வங்கத்தில் விழாப் பந்தல்களை அலங்கரிக்கும். தனது குழந்தையையும், அகிலத்தையும் அரவணைத்துக் காக்கும் அன்புத் தாயாய்…

பார்வதி தேவி,” ஸ்கந்த மாதா வாக” கொண்டாடப்படும் துர்க்கா பூசையில்,மாதா தன் மடியில்,ஆறுமுகனை அணைத்துக் கொண்டு,அமர்ந்திருக்கும் காட்சி, மேற்கு வங்கத்தில் விழாப் பந்தல்களை அலங்கரிக்கும்.

தனது குழந்தையையும், அகிலத்தையும் அரவணைத்துக் காக்கும் அன்புத் தாயாய் அமர்ந்து அருள் பாலிப்பது கண் கொள்ளாக் காட்சி. சிவபெருமானின் குழந்தை மட்டுமே தன்னை வெல்ல முடியுமென்ற வரத்தைப் பெற்றிருந்த தாரகா சூரனின் வரம் பலித்திட,
சிவ-பார்வதி திருமணம், பல தடைகளைத் கடந்து நடந்து முடிந்தது.

பின்னர் சில நாட்களில் சிவன்-பார்வதி ஒன்றுபட்டு, கார்த்திகேயன் உருவாகக் காரணமாயினர். இந்த அழகிய, அற்புதமான, பிறப்பு பற்றி கவி காளிதாசர் தமது குமார சம்பவம் நூலில் வருணிக்கிறார். கார்த்திகேயனின் வீர்யத்தை தாங்க முடியாது அக்னி பகவான் திணற, அது மாற்றப்பட்டு, கங்கை எடுத்துக் கொள்ள, அதன்பின் ஆறு கார்த்திகைப் பெண்கள், ஆறு குழந்தைகளையும் அற்புதமாய்த் தாங்கி, அன்புடன் வளர்த்து, இறுதியில் தன் பிறப்பின் சூட்சமமான செயலினைச்செய்து தாரகா சூரன் வதம் நடைபெற்றது என்பதே அதன் கதை.

இவ்வாறு பாசத்திற்கு ஆட்பட்ட தேவி தான் தைரியம், பராக்கிரமம், துணிச்சல் மிக்கவளாக, பசிக்கு உணவளிக்கும் தாயாக இருக்கிறாள் என்பதை “பஞ்ச ரத்ன கிரந்தம்” தெளிவுபடுத்துகின்றது. பிரும்மா பிரபஞ்சத்தைப் படைக்கும் முயற்சியில் இருந்தபோது, அவரின் வேண்டுகோளுக்கிணங்க, தனது கிரியா சக்தியால், தேவி முழுவதுமாக துணை நின்றாரென்பதை “பிராண தோஷினி” கிரந்தம் போற்றுகிறது.

சிவபெருமானின் ஐந்து முகங்களையும், அன்னையின் முகத்தை ஆறாவதாகவும் கொண்டு, சண்முகர் ஈசனாகவே தோன்றினார். நான்முகனின் படைப்புத் தொழிலையும் சில காலம் செய்தார். இதை உணர்த்தும் வகையில், திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளப்பட்டியில், நான்கு தலை கொண்ட முருகர் ஆலயம் உள்ளது. மேலும் விருத்தாசலத்தில் முருகர் “கொளஞ்சியப்பராக” வீற்றிருக்கிறார்.

நவராத்திரி வழிபாடு என்பது கல்வி, செல்வம், வீரம் இவைகளை வெற்றியுடன் அடைவது என்பதற்கான விழா. தேவி புராணத்தில் முதன் முதலாக நவராத்திரி, ராமபிரான் காலத்தில்தான் கொண்டாடப்பட்டதாக அறிகிறோம். சோழர் காலத்தில் இவ்விழா தசரா விழாவாகவும் சந்திர குப்த மவுரியர் ஆட்சியிலும் நாயக்கர் கால ஆட்சியிலும் கொண்டாடப்பட்டது. விஜய நகர மன்னர்கள், மக்களிடம் வரி வசூலிக்கும் வழக்கத்தை நடைமுறையை நவராத்திரி காலத்தில்தான் கொண்டு வந்தனர் என்கிறது வரலாறு.

நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினி கதை தென்னகத்திலிருந்துதான் மேற்கு வங்கம் சென்றது என்பர். இவ்விழா அக்பர் காலத்திலும், சேதுபதி மன்னர், திருமலை நாயக்கர் காலங்களிலும் கொண்டாடப்பட்டது.

நாடு சீரும் சிறப்புமாக பரிமளம் அளிக்க, அரசாங்கம் செங்கோல் படி செயல்பட அனைத்து செல்வங்களும் கிடைக்க, நம்பிக்கையுடன் அனைவருமே நவராத்திரி விழாவைக் கொண்டாடினர். வடமாநிலங்களில் நவராத்திரி கடைசி நாளில் துர்க்கை சிலை கங்கையில் போடப்படும்.

அதாவது மா துர்கா இமயமலைக்குத் திரும்பிச் செல்வதாக ஐதீகம். மராட்டியத்திலோ, முதல் நாள் கலசத்திலிட்ட நவ தானியங்களை, விஜய தசமி அன்று, ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆறுகளில், நீர்நிலைகளில் கரைத்து வழிபடுவர்.

புராண, இதிகாச கதைகள் அசாதாரணமானவை. இவைகளைத் தகுந்தபடி சொல்லி, உலகுக்குப் புரிய வைப்பதென்பது பெரிய விஷயம். நமது சடங்குகளில் “ஓம்சாந்தி, சாந்தி, சாந்திஹி” என மந்திரங்கள் முடியும். அந்த அமைதிதான் உலக வாழ்க்கை, அது வெளி அமைதி இல்லை. உள்ளத்து அமைதி. உலக அமைதியாக மாற்றும் அதே நேரம் நாம் இவ்வுலகில் அமைதியாக வாழவும், தர்மம் தழைக்கவும், நேர்மை, நியாயம், நிலைக்கவுமான விழா நாட்களிவை. முன்னோர்களின் வழி இதுவாகத்தானிருந்தது.

-சுப்பிரமணியன்,

ஆன்மீகவாதி, ஓய்வு பெற்ற ஊழியர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.