இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக அரங்கேறிய தீண்டாமை

இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக கடைபிடிக்கப்பட்ட தீண்டாமை காரணமாக அவரால் தலைவர் இருக்கையில் கூட அமர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடிக்கடி தீண்டாமை நிகழ்வுகள் தலைகாட்டத் தான் செய்கின்றன. அதற்கு…

இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக கடைபிடிக்கப்பட்ட தீண்டாமை காரணமாக அவரால் தலைவர் இருக்கையில் கூட அமர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடிக்கடி தீண்டாமை நிகழ்வுகள் தலைகாட்டத் தான் செய்கின்றன. அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அருகே உள்ள உத்திரம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் தான் இந்த அநீதியைச் சந்தித்தவர். அரசுதொடக்கப் பள்ளி வளாகத்தில் வசித்து வரும் அவர், நிற்க கூட இடமில்லாத சிதலமடைந்த ஓலை குடிசையில் மிகுந்த வறிய நிலையில் உள்ளார்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் உத்திரம்பட்டு ஊராட்சி பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் போட்டியிட்ட மனோகரன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றார். ஆனால் அதன் பிறகுதான் அவர் அடுத்தடுத்து சோதனைகளை எதிர்கொண்டார். ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்று மக்கள் பணி செய்ய ஆவலாக இருந்த மனோகரனை ஊராட்சி மன்ற செயலாளர் வெங்கடேசன் தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளார். இதனால் ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து கடந்த ஓராண்டு காலமாக தலைவர் இருக்கையில் ஒருநாள் கூட அமர முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

தீண்டாமைக் கொடுமையால் தனிப்பட்ட மனோகரனுக்கு மட்டுமின்றி அவர் சார்ந்த இருளர் பழங்குடியின மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. மனோகரன் தலைவரானதும் தங்கள் நிலை மாறும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அந்த கிராமத்து இருளர் பழங்குடியின மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.

சாதிய பாகுபாட்டுக்கு ஆளான மனோகரனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனின் கவனத்துக்கு கொண்டு சென்றது நியூஸ் 7 தமிழ். அதன்பயனாக அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாவட்ட ஆட்சியர், கடந்த 23 ஆண்டு காலமாக ஒரே கிராமத்தில் பணியாற்றி வந்த ஊராட்சி செயலர் வெங்கடேசனை உத்திரம்பட்டு கிராமத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார் .

மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை மூலம் இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருவக்கு எதிராக கடைபிடிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.