”அப்துல் கலாம் – நினைவுகளுக்கு மரணமில்லை” என்கிற நூலின் ஆங்கிலப் பதிப்பை ராமேசுவரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, ‘அப்துல் கலாம் – நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில், அவரது அண்ணன் மகள் ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர், விண்வெளி விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
ஒய்.எஸ்.ராஜன், அப்துல் கலாமுடன் நீண்டகாலம் இணைந்து பணியாற்றியவர். நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தவர். நசீமா மரைக்காயரும் இவரும், கலாமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், மற்ற புத்தகங்களைக் காட்டிலும் இந்தப் புத்தகத்தில் கூடுதல் தகவல்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.
இந்தப் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பை கடந்த 2021 ஜனவரியில் சென்னை ஆளுநர் மாளிகையில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். தற்போது ‘Dr.Apj Abdul Kalam: Memories Never Die’ என்ற ஆங்கிலப் பதிப்பை இன்று ராமேசுவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். அப்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்தப் புத்தகத்தை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு ஸ்ரீபிரியா ஸ்ரீநிவாசன் மொழிபெயர்த்துள்ளார்.
முன்னதாக, இன்று அதிகாலை ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க பூஜையில் அமைச்சர் அமித் ஷா பங்கேற்று, தரிசனம் செய்தார். நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, பேக்கரும்பில் உள்ள கலாம் தேசிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாம் இல்லத்தில் உணவருந்திய அமித் ஷா, பாம்பன் குந்துக்காலில் உள்ள விவேகானந்தர் இல்லத்தைப் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மண்டபம் முகாம் ஹெலிபேடுக்கு வந்து, பிற்பகல் 2 மணியளவில் மதுரை விமான நிலையம் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.







