சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2ம் தேதி தமுகஎச சார்பில் சென்னையில் “சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை உதயநிதி ஸ்டாலின் “ இந்த மாநாட்டிற்கு சனாதன ஒழிப்பு மாநாடு என மிகச் சரியாக வைத்துள்ளீர்கள். சனாதன எதிர்ப்பு மாநாடு வைக்கவில்லை. சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதுதான் சிறந்தது. எப்படி டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் போன்றவற்றையும் ஒழித்துள்ளோமோ அதே போல சாதி மற்றும் ஏற்றத் தாழ்வுககளை ஊக்குவிக்கும் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என பேசியிருந்தார்.
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் ‘பரிவர்தன் யாத்திரை’யை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
12 லட்சம் கோடி ஊழல் செய்ததாக UPA மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்துடன், காந்தி குடும்பத்தால் மட்டுமே நாட்டை ஆள முடியும் என்ற அகங்காரமும் மனதில் கர்வமும் சேர்ந்துள்ளது. இரண்டு நாட்களாக “இந்தியா கூட்டணி” இந்த நாட்டின் கலாச்சாரத்தையும், சனாதன தர்மத்தையும் கடுமையாக அவமதித்து வருகிறார்கள்.
I.N.D.I.A கூட்டணியின் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸும், திமுகவும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இவர்கள் திருப்திக்காகவும் வாக்கு வங்கி அரசியலுக்காகவும் ‘சனாதன தர்மத்தை’ அவமதித்துள்ளனர்.இந்த I.N.D.I.A கூட்டணிகள் வாக்கு வங்கி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் செய்ய எந்த எல்லைக்கும் செல்லலாம். இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார்.







