வீட்டு நிர்வாகத்தை கவனிப்பதிலும், பட்ஜெட் போட்டு வீட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் காப்பதிலும் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் சுதந்திர இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்த 28 நிதியமைச்சர்களில் இருவர்தான் பெண்கள். ஒருவர் இந்திரா காந்தி, மற்றொருவர் நிர்மலா சீதாராமன்.
இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டையடுத்து நிதியமைச்சர் பதவியை கடந்த 1969ம் ஆண்டு ராஜினாமா செய்தார் மொரார்ஜி தேசாய். இதையடுத்து பிரதமர் இந்திராகாந்தி நிதி இலாகாவை தானே கவனித்து வந்தார். அப்போது 1970-71ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இந்திராகாந்தி தாக்கல் செய்தார். இந்திய பட்ஜெட் வரலாற்றில் பெண் ஒருவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இந்திராகாந்தி தாக்கல் செய்த பட்ஜெட்தான். வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து இந்த பட்ஜெட்டை உருவாக்கினார் இந்திராகாந்தி. வறுமை ஒழிப்புக்கு என பல்வேறு திட்டங்களை இந்திராகாந்தி அறிமுகப்படுத்தினார்.
சிகரெட் உபயோகிப்பாளர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிக்கொண்டே இந்திரா காந்தி வெளியிட்ட அறிவிப்பு ஒன்று பட்ஜெட் வரலாற்றி மிகவும் பிரபலம். ஆம். 1970-71ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், சிகரெட்டுக்கான வரியை அதன் பல்வேறு விலைகளின் அடிப்படையில் 3 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்தார் இந்திராகாந்தி.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த மற்றொரு பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த 2019ம் ஆண்டு மே 31ந்தேதி நிதியமைச்சராக பொறுப்பேற்ற அவர்தான் இந்தியாவின் முதல் முழுநேர மத்திய நிதியமைச்சர். ஏற்கனவே இந்திராகாந்தி நிதி இலாகாவிற்கு பொறுப்பு வகித்திருந்தாலும் அதனை கூடுதல் பொறுப்பாகத்தான் கவனித்து வந்தார். நிதி இலாகாவிற்கென தனியாக கேபினெட் அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் பெண் நிர்மலா சீதாராமன்தான். 2023ம் ஆண்டு அவர் தாக்கல் செய்யும் பட்ஜெட் அவரது 5வது பட்ஜெட் ஆகும். இதன் மூலம் தொடர்ச்சியாக 5 பட்ஜெட்டுகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் இணைந்துள்ளார். 2019ம் ஆண்டு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வரும்போதே 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வந்த பாரம்பரியம் ஒன்றை உடைத்தார் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தாக்கலின்போது நாடாளுமன்றத்திற்கு வரும் நிதியமைச்சர்கள் ஆங்கிலேயேர் காலத்து பாரம்பரியப்படி ப்ரீப்கேஸ்களில் பட்ஜெட்கோப்புக்களை கொண்டு வருவது வழக்கம். அதனை மாற்றி சிவப்பு நிற பையில் பட்ஜெட் கோப்புகளை கொண்டுவந்தார் நிர்மலா சீதாராமன்.
மிக நீண்ட பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததும் நிர்மலா சீதாராமன்தான். 2020-2021ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை 2 மணி நேரம் 42 நேரம் நாடாளுமன்றத்தில் வாசித்தார் நிர்மலா சீதாராமன். காகிதமில்லா முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்ததும் நிர்மலா சீதாராமன்தான். கடந்த 2021ம் ஆண்டு முதல் காகிதமில்லாத பட்ஜெட்டை நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.







