பெரு நிறுவனங்கள் பல, ஊழியர்களை பணிநீக்கம் செய்துவரும் நிலையில், சீன நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் போன்ஸ் வழங்கியுள்ளது.
சமீப காலமாகவே கூகுள், அமேசான், டுவிட்டர், மெட்டா, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல முக்கிய பெருநிறுவனங்கள், ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. கொரோனா பரவல், ரஷ்ய-உக்ரைன் போர் ஆகியவற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அந்நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் சீனாவில் உள்ள ஒரு நிறுவனம், தனது ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் போனஸ் வழங்கியுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில், கனரக வாகனங்களை தயாரிக்கும் ’ஹெனான் மைன்’ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டு 23% அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம், ஹெனான் மைன் நிறுவனத்தின் மொத்த வருவாய் சுமார் 11 ஆயிரத்து 18 கோடி ரூபாயை (9.16 பில்லியன் யுவான்) எட்டியுள்ளது.
இதனால், ஊழியர்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்த ஹெனான் மைன் நிறுவனம், ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, சுமார் 73 கோடி ரூபாய் தொகையை மலைபோல் குவித்து வைத்தது. அதிலிருந்து, அந்நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய விற்பனை மேலாளர்களுக்கு தலா 6 கோடி ரூபாயும், மற்ற ஊழியர்களுக்கு தலா 1.20 கோடி ரூபாயும் போனஸாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பணக்கட்டுக்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பான புகைப்படங்களும், ஊழியர்கள் பணக்கட்டுக்களை தூக்க முடியாமல் தூக்கிச் செல்வது தொடர்பான புகைப்படங்களும், இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.







