36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள் சினிமா

மறக்க முடியாத மாமேதைகள்: வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி, சக்தி கிருஷ்ணசாமி


ஜ. முஹம்மது அலீ

கட்டுரையாளர்

நாடு குடியரசு கண்ட நாள்…. எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை போற்றிப் பாராட்டும் இந்த நாளில் சிலரை நினைவு கூறுகிறது இந்தக் கட்டுரை.

சுதந்திரத்திற்காக வீர முழக்கமிட்ட எண்ணற்ற தியாகிகளை தெரியாது. கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனாரை மறந்திருப்போம்.. சுதந்திர காற்றை சுவாசிக்க தனது மூச்சுக்காற்றை இழந்த வீரபாண்டிய கட்டபொம்மனை அடையாளம் காட்டியது நடிகர் திலகம் சிவாஜி மட்டுமல்ல… அவரது வசனங்களும் தான்..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? என நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசிய வீறு கொண்ட வசனங்கள் இன்றளவும் மனதுக்குள் எதிரொலிக்கிறது… வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் இடம் பெற்ற இத்தகைய அனல் பறக்கும் வசனங்களை யாரால் மறக்க முடியும்..? இன்றளவும் நரம்புகளை முறுக்கேற்றி விடுதலை முழக்கத்தை வீறு கொண்டு எழச்செய்யும் உரையாடலை தந்தவர், அனல் பறக்கும் வசனங்களை எழுதியவர் யார் தெரியுமா? சக்தி கிருஷ்ணசாமி என்கிற மறக்கமுடியாத மாமனிதர்.

“எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அல்லது அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்குக் கேட்கிறாய் திறை, யாரைக் கேட்கிறாய் வரி? போரடித்து நெற்குவிக்கும் மேழிநாட்டு உழவர் கூட்டம், பரங்கியரின் உடலையும் போரடித்து, தலைகளை நேர்க்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை” என்ற வசனங்களை எழுதி தேசப்பற்றை பாமரனுக்கும் தனது அனல்மிகு உரையாடலால் தந்தவர்…

புராண, வரலாற்றுக்கதைகள் திரைப்படமாக தயாரிக்கப்பட்ட காலகட்டத்தில், தமிழ் திரைப்பட உலகை, திசை மாற்றியவர் கிருஷ்ணசாமி..

தஞ்சாவூரில் பிறந்த கிருஷ்ணசாமி, சக்தி என்ற பெயரில் நாடக மன்றம் நடத்திய நிலையில், பெரும் வரவேற்பு காரணமாக நாடகம் நடைபெறும் நகரங்களுக்கு பொதுமக்கள் செல்ல சக்தி என்ற பெயரில் சிறப்பு ரயில்களை இயக்கியது ரயில்வே துறை… சக்தி நாடக சபையில் நடித்து திரைக்கு வந்தவர்களில் சிவாஜிகணேசன், நம்பியார், எஸ்.வி. சுப்பையா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்..

சக்தி நாடக சபை நடத்திய நாடகத்தில் நூர்ஜஹான் என்ற பெண்ணின் வேடத்தில் நடித்து வந்த நடிகரின் திறமையை கண்டு வியந்தார் தொழில் அதிபர் பி.ஏ.பெருமாள். ஏவிஎம் அதிபர் மெய்யப்ப செட்டியாருடன் இணைந்து திரைப்படம் தயாரிக்க எண்ணியதும், பெண்ணாக நடித்த கணேசன், பராசக்தி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானதும் தெரிந்த கதை.

சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் கதை கம்பளத்தார் கூத்து என்ற பெயரில் தெருக்கூத்தாக நடத்தப்பட்டு வந்தது. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நெல்லை அருகே உள்ள கயத்தாறை காரில் கடந்து சென்ற சிவாஜி, கட்டபொம்மனின் வரலாற்றை நாடகமாக எழுதினால் என்ன என தன்னுடன் வந்த கிருஷ்ணசாமியை கேட்க ஒரே மாதத்தில் தயாரானது கட்டபொம்மன் நாடகம்…. உடை மற்றும் அரங்க அமைப்புக்காக அந்தக்காலத்திலேயே 50 ஆயிரம் ரூபாய் அளித்தார் சிவாஜி.

சேலத்தில் அரங்கேற்றிய பின், சென்னையில் நடைபெற்ற கட்டபொம்மன் நாடகத்தை கண்ட இயக்குநர் பி.ஆர். பந்துலு திரைப்படமாக தயாரித்தார். நாடெங்கும் வீரத்துடன் வெற்றி நடை போட்டான் வீரபாண்டிய கட்டபொம்மன். சக்தி கிருஷ்ணசாமி தந்த கதை-வசனம் தனியே புத்தகமாகவும், ஒலி நாடாவாகவும் விற்பனையாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது… சுதந்திர போராட்டத்தை தொடங்கி வைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் இன்றும் ரசிகர்களை சிலிர்த்து எழ வைக்கிறான்..

“பொன்னாட்டு மக்கள் எங்கள் தென்னாட்டு மக்கள். போரென்றால் புலிக்குணம், பொங்குமின்பக் காதலென்றால் பூமணம், புகழுக்குரிய மானமென்றால் உலகிற்கே ஒரே இனம் என்ற சரித்திரம் கண்டவர்கள் நாங்கள். எங்களை அடக்கியாள ஆண்டவனும் எண்ணியதில்லை. விரும்பினால், அன்பைக்காட்டி நண்பர்களாய் எங்களோடு வாழ்ந்ததுண்டு. அந்த புண்ணிய பூமியிலே, நாடு பிடிக்க வந்த நீங்கள் நரி வேஷம் கட்டி வாலையாட்டி நிற்கிறீர்கள். காலம் உங்களுக்கு கருணை காட்டினும், நல்லவர்கள் உங்கள் காலை பிடித்து வாழமாட்டார்கள் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்”

காலங்கள் மாறினாலும், கொண்ட கருத்தால், நாட்டுப்பற்றை ஊட்டிய வரிகளையும் அதனை வடிவாக தந்த சக்தி கிருஷ்ணசாமி போன்றவர்களையும் மறக்க முடியுமா?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading