கடந்த ஓர் ஆண்டில் இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவுகள் காரணமாக இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 50 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் (UNHCR) அறிக்கையை மேற்கோள்காட்டி PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டில் வன்முறை, உணவுப் பாதுகாப்பின்மை, மனித உரிமை மீறல்கள், பருவநிலை மாற்றம், உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் 10 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக யூஎன்எச்சிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரழிவு காரணமாக, உலகம் முழுவதும் 2.37 கோடி புதிய உள் இடப்பெயர்வுகள் ஏற்பட்டுள்ளதாக உள் இடப்பெயர்வு கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதில், மோதல் மற்றும் வன்முறை காரணமாக உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70 லட்சம் குறைவாகும். 2021 ஆம் ஆண்டில் பேரழிவுகள் காரணமாக சீனாவில் மிகப்பெரிய அளவில் 60 லட்சம் இடம்பெயர்ந்துள்ளனர். பிலிப்பைன்ஸில் 57 லட்சம் பேரும், இந்தியாவில் 49 லட்சம் பேரும் இடம்பெயர்ந்துள்ளனர். பெரும்பாலான பேரிடர் இடப்பெயர்வுகள் தற்காலிகமானவை என்று ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் தங்கள் சொந்த பகுதிகளுக்குத் திரும்பிவிட்டனர். ஆனால் உலகெங்கிலும் உள்ள 59 லட்சம் பேர் பேரழிவுகள் காரணமாக ஆண்டின் இறுதியில் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த காலங்களை ஒப்பிடும்போது, ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2021ஆம் ஆண்டின் இறுதியில் போர், வன்முறை காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட எட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இது பத்து ஆண்டுகளுக்கு முந்தைய எண்ணிக்கையைவிட இருமடங்கு அதிகமாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், உக்ரைன் மீதான ரஷ்ய போர் மிகப்பெரிய மற்றும் கட்டாய இடப்பெயர்வுகளை அதிக அளவில் ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு இறுதியில் 27.1 மில்லியன் அகதிகள் மற்றும் யூஎன்எச்சிஆர்-இன் கீழ் 21.3 மில்லியன் அகதிகள், 5.8 மில்லியன் பாலஸ்தீன அகதிகள் உள்பட உலக அளவில் 89.3 மில்லியன் மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், உள்நாட்டிலேயே 53.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 4.4 மில்லியன் வெனிசுலா மக்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 4.6 மில்லியன் மக்கள் புகலிடக் கோரிக்கையாளர்களாக உள்ளனர் என ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








