ஆரணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெங்கடாசலபதி கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க கோலாகலமாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரும்பேடு ஏசிஎஸ் நகரில், ஏபிஎஸ் கல்வி குழுமத்தினரால் வெங்கடாசலபதி கோயில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து பூசாரிகள் வந்து வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் முதல் கால யாக பூஜையை தொடங்கினர்.
இரண்டாம் கால யாக பூஜை, கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம், சரஸ்வதி பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை செய்து கலச வேல்வி பூஜை செய்யப்பட்டது. பின்னர் 80 அடி உயர ராஜா கோபுரம்,கருவரை கோபுரம் மூலவர் சன்னதியின் வலப்புறம் இடப்புற கோபுரங்களுக்கு கலச புறப்பாடு புறப்பட்டு புனித நீர் தெளித்து மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில், தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், வேலுமணி, வீரமணி, தங்கமணி, ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயணா, சினிமா இயக்குநர்கள் பாண்டியராஜன், சுந்தர் சி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் ஏபிஎஸ் கல்வி குழும நிறுவனர் ஏ சி சண்முகம் வரவேற்றார்.
– இரா.நம்பிராஜன்








