ஆதார் அட்டை மூலம் அரசு 2.25 லட்சம் கோடி வரை சேமித்துள்ளதாக UIDAIன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆதார் அடையாள அட்டை, இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு குடிமகன் என்ற அடையாளத்தை அளிக்கும் முதன்மை அடையாள அட்டையாகும். தற்கால சூழலில் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் தேவைப்படுகிறதோ இல்லையோ ஆனால் ஆதார் அவசியமாக தேவைப்படுகிறது. எந்த ஒரு சான்றிதழ் வாங்க வேண்டுமென்றாலும் முதலில் தேவைப்படும் அடையாள அட்டை ஆதார் தான். வங்கிக் கணக்கு தொடங்குவது, சிம் கார்ட் வாங்குவது உள்ளிட்ட பலவற்றிற்கும் ஆதார் கார்ட் மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அன்றாட வாழ்வில் தேவைப்படும் அனைத்து ஆவணங்களுக்கும் ஆதாரே அத்தியாவசியமாக உள்ளது.
தற்போது கொரோனா தடுப்பூசி பதிவு செய்வதற்கு ஆதார் முக்கியமாக உள்ளது. இந்நிலையில், UIDAIன் தலைமை நிர்வாக அதிகாரி சவுரப் கர்க் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் இதுவரை 131 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் பலன்கள் சரியாக நபர்களாக நேரடியாக பொதுமக்களுக்கு சென்றடைந்தது. இதன் மூலம் 2.25 லட்சம் கோடி வரை அரசு சேமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







