யுஜிசி நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு – புதிய அட்டவணை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை..!

ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு, என்சிஇடி தேர்வு ஆகியவற்றிக்கான புதிய தேர்வு கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப்…

ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு, என்சிஇடி தேர்வு ஆகியவற்றிக்கான புதிய தேர்வு கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை ஆகியவற்றிக்கான தகுதி தேர்வான 83 பாடங்களுக்கு நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வு கடந்த ஜூன் 18-ம் தேதி தேசிய அளவில் நடைபெற்றது. இதில் சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதினர்.

தொடர்ந்து, நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஜூன் 25 முதல் 27 வரை நடைபெறவிருந்த 5 அறிவியல் பாடங்களுக்கான சிஎஸ்ஐஆர்- யுஜிசி- நெட் தேர்வை தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

வினாத்தாள் கசிவு, தேர்வு நடைமுறையில் குளறுபடி இருப்பதாக மாணவர்களிடம் இருந்து வலுத்த புகார் ஆகிய காரணங்களினால், ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வு ஒரு நாள் முன்பு ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட மற்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, NCET 2024 தேர்வு ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது. சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் (CSIR-UGC NET) தேர்வு ஜூலை 25 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும்.

ரத்து செய்யப்பட்ட யுஜிசி-நெட் ஜூன் (UGC-NET) 2024 தேர்வு ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தேர்வுகளும் கணினி வழியில் நடைபெறும். ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் 2024 தேர்வு ஓஎம்ஆர் முறையில் நடைபெற்ற நிலையில், மறுதேர்வு கணினி வழியில் நடைபெறவுள்ளது. அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவு தேர்வு (AIAPGET) முன்னதாக திட்டமிட்டப்படி ஜூலை 6, 2024 அன்று நடைபெறும் என புதிய கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.