உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46 வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தனது பிறந்த நாளையொட்டி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் திமுக கொடியேற்றி, நகத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், மக்கள் பணியே இலக்கு. ஒன்றிய அளவில் பாசறைக் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பாஜகவை அட்டாக் பன்றதுக்கு கண்டிப்பாக கன்டென்ட் கிடைக்கும். புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள். கட்சி வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து பணிபுரிவோம் என்று கூறினார்.
தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், கண்ணியமிகு பேச்சால் இனமான உணர்வூட்டி, கட்டுப்பாடு மிகு கழகத்தை இளைஞர்களைக் கொண்டு உருவாக்கிய பேரறிஞர் அண்ணா-ஆதிக்கத்திற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் ஓய்வறியாமல் உழைத்த சமூகநீதி போராளி முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடங்களில் என் பிறந்தநாளான இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினோம் என்று பதிவிட்டுள்ளார்.







