தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 2 நாட்கள் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. முதலில் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை, சமூக நீதித்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறைகள் சார்ந்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனிடையே, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செம்மஞ்சேரி குளோபல் ஸ்போர்ட் சிட்டி கைவிடப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “எங்களுடைய தலைவர் தலைமையிலான ஆட்சியில், தமிழ்நாட்டிலிருந்து உலகத் தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கவும், சென்னையில் ஒரு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் விளையாட்டு கட்டமைப்பு உருவாக்கணும்னு, செம்மஞ்சேரியில் 128 ஏக்கர்ல 261 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கின்ற பணிகளை நாங்கள் தொடங்கியிருந்தோம். எப்படி இந்த அரசு பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்ததோ, அதே மாதிரி இப்போது குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தையும் ரத்து செய்திருக்கிறது என்று செய்திகள் வந்திருக்கிறது. செம்மஞ்சேரி குளோபல் ஸ்போர்ட் சிட்டி ஏன் கைவிடப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுணா, “ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை ரத்து செய்யவில்லை. அதனை மறுஉருவாக்கம் செய்து வருகிறோம். விளையாட்டு நகரத்தை ஒலிம்பிக் தரத்தில் உருவாக்க வேண்டும். ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக புதிய கட்டமைப்புக் கொள்கை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விடுதிகள் உருவாக்க உள்ளோம். 6 மாதத்தில் ஒலிம்பிக் நகரம் குறித்த நல்ல செய்தி வரும். ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்க வேண்டுமெனில் ஒலிம்பிக் தரத்தில் உருவாக்க வேண்டும், அதுதான் அரசின் கொள்கை” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “சென்னைக்கு அருகில் இடம் கிடைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. தயவுசெய்து மறுஉருவாக்கம் செய்து, பணிகளை விரைவில் முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது விளையாட்டு வீரர்களுக்கு நிச்சயமாக உபயோகமாக இருக்கும் என்பதை அரசின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.




