உதயநிதிக்கு அமைச்சரவையில் 10வது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நேற்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் ஊரக கடன்கள், வறுமை ஒழிப்பு மற்றும் முதலமைச்சர் வசம் இருந்த சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், வாரிசு அரசியல் என்பது ஆரம்பம் தொட்டே தன் மீது வைக்கப்படுகிற விமர்சனம் என்றும், அவற்றிற்கு எல்லாம் தனது செயல்பாடுகள் மூலமாக பதிலளிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் 35 பேர் கொண்ட அமைச்சர்கள் வரிசையில் 10வது இடம் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் உள்ளனர். உதயநிதிக்கு அடுத்து அமைச்சர் ரகுபதி 11வது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.
இதன்மூலம் சட்டமன்றத்தில் முன் வரிசைக்கு வருகிறார் உதயநிதி. அத்துடன், பல்வேறு விவாதங்களில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பும், பதிலளிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கும்.







