உதகையில் பேருந்துகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

உதகையில் அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை கோட்டத்திற்குட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பணிமனைகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.…

உதகையில் அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க பயணிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை கோட்டத்திற்குட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர்,
கோத்தகிரி ஆகிய பணிமனைகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சில காலமாக இங்கு இயக்கப்படும் பேருந்துகளின் மேற்கூரைகளில் ஓட்டை விழுந்து பல பேருந்துகளில் மழைக் காலங்களில் பயணிகள் குடை பிடித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

உதகையிலிருந்து மசினகுடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாயார், சிங்கார, சீகூர், உள்ளிட்ட பழங்குடியின கிராமப் பகுதிகளுக்கு நாள்தோறும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், உதகையில் இருந்து மாயார் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்து முறையாக பராமரிக்கப்படாததால் மழை காரணமாகப் பேருந்தில் ஆங்காங்கே மழை நீர் ஒழுகியது.

இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் கடும் சிரமத்துடன் குடைகளைப் பிடித்தபடி
பேருந்தில் பயணம் செய்கின்றனர். இந்தக் காட்சியை பேருந்தில் பயணம் செய்த மற்ற
பயணிகள் பேருந்தின் அவல நிலையை குறித்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர்.

எனவே, அரசுப் பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.