முதலமைச்சர் ஏக்நாத்துக்கு எதிராக உத்தவ் தாக்கரே அதிரடி

சிவ சேனாவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மகாராஷ்ட்ர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டுள்ளார். சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மீது ஏற்பட்ட அதிருப்தி…

சிவ சேனாவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மகாராஷ்ட்ர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டுள்ளார்.

சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனி அணியாக பிரிந்து சென்றார். சிவ சேனாவைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவாக அவருடன் சென்றனர்.

இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாஜக கூட்டணி அரசில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டிருப்பதாக கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மேலும், பாஜகவையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

2019ல் நடைபெற்ற மகாராஷ்ட்ர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – சிவ சேனா கூட்டணி அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, முதலமைச்சர் பதவியை இரு கட்சிகளும் இரண்டரை ஆண்டுகள் சமமாக பங்கிட்டுக்கொள்ள சிவ சேனா நிபந்தனை விதித்தது.

இதனை ஏற்க பாஜக மறுத்துவிட்ட நிலையில், சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது.

இதனை தற்போது சுட்டிக்காட்டியுள்ள உத்தவ் தாக்கரே, தான் 2019ல் கோரியதை பாஜக ஏற்றுக்கொண்டிருந்தால், சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணியே ஏற்பட்டிருக்காதே என தெரிவித்துள்ளார்.

அப்போது தன்னை முதலமைச்சராக ஏற்க மறுத்த பாஜக தற்போது ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக்கி இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே சிவ சேனாவைச் சேர்ந்தவர் என பாஜக கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, அவர் சிவ சேனாவுக்கு துரோகம் இழைத்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.