மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காரும், தியாகராஜா குழுமங்களின் தலைவருருமான கருமுத்து கண்ணன் காலமானார். கல்வி, தொழில்துறை, ஆன்மிகம் என பலதுறைகளில் சிறந்து விளங்கிய அவரது பன்முகத்தன்மையை விவரிக்கும் செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், இலங்கையிலும் பிறகு மதுரையிலும் ஜவுளி தொழிலில் கொடி கட்டி பறந்த கருமுத்து தியாகராஜனுக்கும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதா தம்பதிக்கும் 1953ஆம் ஆண்டு மகனாக பிறந்தார் கருமுத்து கண்ணன். கருமுத்து தியாகராஜன் – ராதா தம்பதியினர், தொழில் துறையை கடந்து, கலை, இலக்கியம், கல்வி, ஆன்மிகம், சைவ சித்தாந்த ஆய்வு என பன்முக தன்மை கொண்டவர்களாக விளங்கினர். பெற்றோரை போலவே, கருமுத்து கண்ணனும், ஜவுளி தொழிலில் பல சாதனைகள் புரிந்தார். தியாகராஜா மில்ஸ், விருதுநகர் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய ஜவுளி ஆலைகளை திறம்பட நடத்தினார்.
தமிழறிஞர்களை உருவாக்கி பெருமை சேர்த்த தியாகராஜர் கல்லூரியையும், தமிழ்நாட்டின் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான தியாகராஜர் பொறியியல் கல்லூரியையும், சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறச்செய்த சாதனை கண்ணனையே சாரும் என்றால் மிகையாகாது. மத்திய மாநில அரசுகளின் தொழில் துறை சார்ந்த பல்வேறு குழுக்களில் இடம் பெற்றிருந்த கண்ணன், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்து ஆலோசனைகளை வழங்கினார். திருச்சியிலுள்ள, தேசிய தொழில் நுட்ப கழகம், மற்றும் இந்தூரிலுள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்தியத் தொழில் கூட்டமைப்பு மற்றும் தென்னிந்திய நூற்பாலைகள் கூட்டமைப்புகளின் தலைவராக பதவி வகித்த கருமுத்து கண்ணன், மத்திய அரசின் ஜவுளிக்குழுவின் தலைவராக இருந்து, ஜவுளித்துறை மேம்பட பாடுபட்டார். நிதி மேலாண்மை, கார்ப்ரேட் நிதியியல், வணிக நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் பரந்த அனுபவம் மிக்கவர் என்று தொழில்துறையினர் கருமுத்து கண்ணனை புகழ்கின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ‘தக்காராக ஏறக்குறைய 20 ஆண்டுகளாக செயல்பட்டு கோயில் திருப்பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட கருமுத்து கண்ணன், மதுரை நகரின் வளர்ச்சியிலும், தென்மாவட்ட தொழில் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் எந்த அரசு அமைந்தாலும், தொழில்துறை மற்றும் ஆன்மிகம் சார்ந்த ஆலோசனை குழுக்களில் இடம்பெறும் அளவுக்கு பெருமை பெற்று விளங்கினார் கருமுத்து கண்ணன்.
கல்வி மற்றும் சமூக சேவையை மேம்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்ட கருமுத்து கண்ணனுக்கு, 2015ம் ஆண்டு, தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஜவளி துறையில் முத்திரை பதித்து கல்வி, தொழில்துறைகளில் புதியவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சிறிது காலமாக அவதிப்பட்டு வந்த கருமுத்து கண்ணன், மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் தனது 70வது வயதில் காலமானார். அவரது மறைவு, தமிழ்நாட்டில் ஆன்மீகத்திலும், தொழில் துறையிலும், ஏற்பட்ட பேரிழப்பு என்றே சொல்லலாம்.







