மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தயாராக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்னும் 20 ஆண்டுகள் வரை மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர் என தெரிவித்தார்.
கருணாநிதிக்கு பின்பு மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதைப்போல், அவருக்குப் பின்பு உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக தயாராக உள்ளதாக கூறினார். வாரிசாக இருந்தாலும் இருவரும் பல சிரமங்களைத் தாண்டியே மேலே வந்ததாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘திமுக-வை எதிர்த்து சண்டை போட ஆள் இல்லை, முதலில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சண்டைக்கு வாருங்கள்’ என அதிமுகவை விமர்சித்தார். மேலும், கடந்த 10 வருடம் கேடு கெட்ட ஆட்சி நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், நமது ஆட்சி நல்ல ஆட்சி! நமது முதலமைச்சர் நல்ல முதலமைச்சர் என தெரிவித்தார்.
அப்போது, ஒவ்வொரு குடும்பத்திலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார் என தெரிவித்த அவர், அதிமுக கஜானா-வை சுரண்டி விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், டெல்லிக்கு பயப்படாத ஒரு தலைமை நமது தலைமை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








