கர்நாடகா பாடப்புத்தகத்திலிருந்து ‘பெரியார்’ பற்றிய பகுதிகள் நீக்கம்!

கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியார் குறித்த பகுதி நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடத் திட்டத்தில் இருந்து சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், பசவண்ணா, விவேகானந்தர் மற்றும் நாராயண குரு…

கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியார் குறித்த பகுதி நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடத் திட்டத்தில் இருந்து சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், பசவண்ணா, விவேகானந்தர் மற்றும் நாராயண குரு குறித்த பகுதிகள் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், இந்தத் தகவலை கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் மறுத்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “இது முழுக்க முழுக்க பொய்யான தகவல், அவர்கள் புத்தகத்தை படிக்காமல் இவ்வாறு தவறான கருத்தை சொல்லி வருகின்றனர். மேலும், சில இந்து விரோதிகள் சர்ச்சையைக் கிளப்ப முயற்சிக்கிறார்கள். நாங்கள் பசவண்ணா, விவேகானந்தர் மற்றும் நாராயண குரு உள்ளிட்டோரின் பாடங்களை நீக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கர்நாடக பாடநூல் கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள புதிய சமூக அறிவியல் பகுதி-1 பாடப்புத்தகத்தின் PDF இல், சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள் தொடர்பான அத்தியாயங்கள் சுருக்கமாக செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கர்நாடக பாடநூல் கழகம் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புதிய சமூக அறிவியல் பகுதி-1 பாடப்புத்தகத்தில் சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய அத்தியாயம் 5 இல் ராஜா ராம் மோகன் ராய் நிறுவிய பிரம்ம சமாஜம், சுவாமி தயானநாத சரஸ்வதியின் ஆரிய சமாஜம், ஆத்மராம் பாண்டுரங்கின் பிரார்த்தனா சமாஜம், ஜோதிபா புலேயின் சத்யசோதன சமாஜம், சர் சையத் அகமது கானின் அலிகார் இயக்கம், ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் அன்னிபெசண்டின் தியோசாபிகல் சொசைட்டி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இதன் முந்தைய பதிப்பில் இடம்பெற்றிருந்த நாராயண குரு மற்றும் பெரியார் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

அண்மைச் செய்தி: ‘டிக்கெட் பரிசோதகருக்கு ரூ.10 லட்சம் அபராதம் – மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவு’

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.​​லோபோ, இது மாபெரும் சமூக சீர்திருத்தவாதியை அவமானப்படுத்துவதாக உள்ளது. எனினும், பாடப்புத்தகங்கள் இன்னும் அச்சிடப்படாததால் விடுபட்ட பாடத்தை சேர்க்க அரசுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. உடனடியாக அரசு இதற்கு முனைப்பு காட்ட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கர்நாடகா பாடப்புத்தகத்திலிருந்து, சமூக மற்றும் மத சீர்திருத்தவாதிகளான நாராயண குரு, பசவண்ணா மற்றும் சுவாமி விவேகானந்தர் பற்றிய எந்த பகுதியும் நீக்கப்படவில்லை என கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். ஆனால், ‘பெரியார்’ பற்றிய பகுதிகள் நீக்கப்படவில்லை என அவர் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.