திடீர் சரண்டர்: குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்தது ட்விட்டர்!

மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ட்விட்டர் நிறுவனம், இந்திய குறை தீர்க்கும் அதிகாரியை இப்போது நியமித்துள்ளது. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல்…

மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ட்விட்டர் நிறுவனம், இந்திய குறை தீர்க்கும் அதிகாரியை இப்போது நியமித்துள்ளது.

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்ப விதிகளை கொண்டு வந்தது. மத்திய அரசின் புதிய விதிகளுக்கு சமூக ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மே 25-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இந்த நிலையில் கூகுள், பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் இந்த விதிமுறைகளுக்கு சம்மதம் தெரிவித்தது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தது.

இதற்கிடையில், புதிய விதிகளை ஏற்கும்படியும் இல்லாத பட்சத்தில் சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரும் என்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, தர்மேந்திர சாதுர் என்பவரை இந்திய குறை தீர்ப்பு அதிகாரியாக ட்விட்டர் நியமித்தது. ஆனால், அவர் திடீரென பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே ட்விட்டர் நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கொரோனா தொற்று காலம் என்பதால், குறை தீர் அதிகாரியை நியமிக்க கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது, ட்விட்டர் நிறுவனம்.

இந்நிலையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைபடி இந்திய குறை தீர்ப்பு அதிகாரியாக, வினய் பிரகாஷ் என்பவரை ட்விட்டரி நியமித்துள்ளது. அவருடைய மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.