ட்விட்டரில் விளம்பரங்கள் பாதியாக குறைந்த்து விட்டதால், அந்நிறுவனம் இன்னும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாக அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினர். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டார். ட்விட்டர் நிறுவனத்தை விட்டு வெளியே சென்ற விளம்பரதாரர்கள் மீண்டும் வருவார்கள். ட்விட்டர் நிறுவனம் லாபப் பாதையில் பயணிக்கும் என கடந்த ஏப்ரல் மாதத்தில் மஸ்க் கூறியிருந்தார். அதன் பின், மே மாதத்தில் விளம்பரத் துறையில் அனுபவமிக்க ஒருவரை ட்விட்டருக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியாகவும் நியமித்தார்.
இருப்பினும், ஒரு நாளில் இத்தனை ட்விட்களை மட்டும் தான் பயனாளர் பார்க்க முடியும் என ட்விட்டர் சில கட்டுப்பாடுகளை விதித்தது அதன் பயனாளர்களை அதிருப்தியடையச் செய்தது. உலகம் முழுதும் உள்ளோருடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள ட்விட்டர் வலைதளம் பெரிதும் பயன்படுகிறது. பல்வேறு துறை பிரபலங்கள் மட்டுமின்றி உலக தலைவர்கள் பலரும் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். உலகளவில் ஐந்தில் ஒருவருக்கு ட்விட்டர் கணக்கு உள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அப்படிப்பட்ட ட்விட்டர் தளம் எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளால் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
சமூக வலைதள பயன்பாட்டாளர்களின் முக்கிய தேர்வுகளில் ஒன்றான ட்விட்டர் தளம் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் என்ற புதிய செயலியால் இன்னும் பின்னடைவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ட்விட்டரில் வியாபாரம் குறித்து ஆலோசனை வழங்குவதாக வெளியான ட்விட் ஒன்றுக்கு பதிலளித்த எலான் மஸ்க் ட்விட்டர் இன்னும் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
ட்விட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல ட்விட்டருக்கு அதிக அளவிலான கடன் சுமை இருக்கிறது. வியாபாரம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக ட்விட்டரை லாபப் பாதைக்கு கொண்டுவர வேண்டும் . இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/imPenny2x/status/1680367757513342976?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









