“கல்வி மூலம் வாழ்க்கையைப் பாருங்கள்” என நடிகர் சூர்யா மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கல்வியால் மட்டுமே சமூகத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்த நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலமாக இன்றுவரை ஏராளமான மாணவ, மாணவியருக்கு கல்வி சார்ந்த பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஆண்டுதோறும் இங்கு படித்த ஏழை மாணவர்கள் மருத்துவர், பொறியாளர், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட கனவுகளை அடைகிறார்கள்.
இந்நிலையில், சென்னையில் இன்று சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நடிகர் சூர்யா பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவித் தொகையை வழங்கினார்.பின்னர் விழாவில் நடிகர் சூர்யா, மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “சாதி, மதத்தைக் கடந்து வாழ்க்கையைப் புரிந்துக் கொள்ளுங்கள். ஒருவர் வீண் சொல், பழிசொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக் கூடாது. அனைவருக்கும் சரியான சமமான கல்விக் கொடுக்க அகரம் அறக்கட்டளை முயற்சி எடுத்து வருகிறது.
கல்வி மூலமாக வாழ்க்கையைப் படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியைப் படியுங்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தலை வணங்குகிறேன். மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பது எவ்வளவு கஷ்டம் என தெரியும். இதுபோன்றக் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வால் தான் வாழ்க்கை முழுமையடைகிறது.
காலையில் சீக்கிரம் எழ வேண்டும்; அதை இப்போதுதான் நான் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளேன். பிறரை பழி சொல்லுதல், பிறரைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதைக் குறைக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.








