மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை கைப்பற்றியது தவெக!

மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த அக்.6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. பின்னர் இ.வி.எம் இயந்தரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, தாராபுரம் இடைத்தேர்தலின் 23 சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்து, தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 66,841 வாக்குகள் பெற்று, 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை (57,370) வீழ்த்தினார். அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல் மதுராந்தகம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 54,008 வாக்குகள் பெற்றார். இதனால் மரகதம் குமரவேல் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 47,450 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி 2,709 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1,986 வாக்குகளையும் பெற்றன..

மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வெற்றி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிச் சான்றிதழை பெற்று வெளியே வந்த பொழுது தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.