தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை தொடர்பு கொள்ள முடியாததால் மாணவர்கள், பெற்றோர் ஏமாற்றம் அடைந்தனர். மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவி நர்மதா ஏமாற்றத்துடன் பள்ளிக்கு சென்றார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த விழாவில் கலந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியில் இருந்து 18 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று நடிகர் விஜயை சந்திக்க ஆவலுடன் இருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக புகைப்படங்கள், மற்றும் விவரங்கள் வாங்கிய நிலையில் எந்த அழைப்பும் இல்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை என புகார் கூறுகின்றனர்.
தூத்துக்குடியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 493 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவி நர்மதா, சென்னை செல்ல தயாராய் இருந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றத்துடன் பள்ளிக்கு சென்றுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை தனியே அழைத்து ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்க வேண்டும் என மாணவி நர்மதா கோரிக்கை விடுத்துள்ளார்.








