மணிப்பூரில் சுமார் ஆயிரம் பேர் கொண்ட வன்முறை கும்பல் அரண்மனை வளாகத்திற்கு அருகே உள்ள கட்டடங்களை எரிக்க முயன்றதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பெருன்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினர், பழங்குடியின அந்தஸ்து கேட்டு போராடி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடந்த மாதம் 3ஆம் தேதி கலவரம் மூண்டது. மோதல் தொடர்ந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது. இதனையடுத்து ராணுவம், அசாம் ரைபிள்ஸ் மற்றும் மணிப்பூர் விரைவு அதிரடிப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சுமார் 1,000 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரண்மனை வளாகத்திற்கு அருகே உள்ள கட்டிடங்களை எரிக்க முயன்றது. இதனையடுத்து அங்கு விரைந்த அதிரடிப்டை கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
இதேபோல் பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைக்க முயன்றது. அப்போது நடைபெற்ற மோதலில் இருவர் காயம் அடைந்தனர். மற்றொரு சம்பவத்தில் எம்.எல்.ஏ. பிஸ்வஜீத் வீட்டிற்கு வன்முறை கும்பல் தீ வைக்க முயன்றது. எனினும் அசாம் ரைபிள்ஸ் படையினர் அவர்களை அங்கிருந்து கலைத்தனர்.மற்றொரு கும்பல் சின்ஜெமையில் உள்ள பிஜேபி அலுவலகத்தை நள்ளிரவில் சுற்றி வளைத்தது, ஆனால் இராணுவம் அவர்களைஅப்புறப்படுத்தியது. இம்பால் மேற்கு பகுதியில் உள்ள இரிங்பாம் காவல் நிலையத்தையும் சூறையாட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் ஆயுதங்கள் எதுவும் திருடப்படவில்லை. பிஷ்ணுபூர் மாவட்டம் குவாக்டா மற்றும் சுராசந்த்பூர் மாவட்டம் காங்வாய் ஆகிய இடங்களில் இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.






