தூத்துக்குடி மாவட்ட அமலி நகர் மீனவர்களின் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டம் வாபஸ்! அறவழிப்போராட்டம் தொடரும் எனவும் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்ட அமலி நகர் மீனவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.…

தூத்துக்குடி மாவட்ட அமலி நகர் மீனவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் 200 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றர். இந்நிலையில் கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்து தரக்கூரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து 2022ம் ஆண்டு சட்டப்பேரவை மீன்வளமானிய கோரிக்கையில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பணிகளும் நடைபெறாததால் மீனவர்கள் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சுமார் 200 படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1.50 கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 10-வது நாளாக மீனவர்கள் குடும்பத்துடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு தண்டோரா அடித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், தமிழ்நாடு அரசை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

வளைவு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 18-ம் தேதி ராமநாதபுரத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் மீனவர்கள் மாநாட்டை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக அமலி நகர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் 10-ஆவது நாளான நேற்று மாலையில் இருந்து தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதனை அடுத்து 11-ஆவது நாளான இன்று மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் தொடர்ந்து மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டம் நடத்திய மீனவர்களிடம் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

மறை மாவட்ட ஆயர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழ ஜூஸ் கொடுத்து சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அதே நேரத்தில் போராட்டத்தை தொடருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.