”மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு நடிக்கவில்லை என்றால் படத்தை டிராப் செய்திருப்போம்!” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு நடிக்கவில்லை என்றால் படத்தை டிராப் செய்திருப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலு, ஃபகத்…

மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு நடிக்கவில்லை என்றால் படத்தை டிராப் செய்திருப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மாமன்னன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் பாராட்டினர்.

அதேபோல இந்திய அளவில் மட்டுமல்லாது, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவிலான டாப் 10 படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. அதில் மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும், அதனுடன் சேர்ந்து ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் இப்படம் இடம் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1.2 கோடி மக்கள் இத்திரைப்படத்தைப் பார்வையிட்டிருந்தார்கள்.

இப்படம் வெளியாகி 50 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டதை படக்குழு சென்னையில் உள்ள திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவில் இயக்குனர், கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், உதயநிதிஸ்டாலின் பறக்கும் பன்றிக்குட்டியுடன் உள்ளது போன்ற சிறிய சிலை பரிசாக வழங்கப்பட்டது.

இந்த விழா மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

படப்பிடிப்பின் போது எனக்கு அடிபட்டது, அப்போதே படம் வெற்றியாகும் என்று கீர்த்தி சுரேஷ் சொன்னார். என்னுடைய முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி எனக்கு மிகப் பெரிய வெற்றியை தேடி தந்தது. அதேபோல் என்னுடைய இந்த கடைசி படமும் எனக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடி தந்துள்ளது. வடிவேலு இந்த படத்தில் நடிக்கவில்லை என்று இருந்ததால்,இந்த படத்தை ட்ராப் செய்து வேற கதையை எடுக்கலாம் என்று தான் எங்கள் எண்ணம்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.