அமமுக தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்றும் அப்போது அதிமுக எந்த நிலையில் இருந்தாலும் அதனை தாங்கள் மீட்போம் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அமமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குறுக்கு வழியில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை அடைய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார். ஐபிஎல் வீரர்களை ஏலம் எடுப்பதுபோல் அதிமுக நிர்வாகிகளை விலைக்கு வாங்கி பொதுச் செயாளர் பதவியை அடைய முயற்சிகள் நடப்பதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.
தனக்கு பின்னர் குறுக்குவழியில் யாரும் பொதுச் செயலாளர் ஆகிவிடக் கூடாது என்பதாலோயே, பொதுச் செயலாளர் பதவிக்கு வருபவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற விதியை அதிமுகவில் எம்.ஜி.ஆர் சேர்த்ததாக டிடிவி தினகரன் கூறினார். இந்த நடைமுறையை மட்டும் யாராலும் திருத்த முடியாது என்கிற விதியை கட்சி சட்டதிட்டங்களில் எம்.ஜி.ஆர் சேர்த்ததாக டிடிவி தினகரன் தெரிவித்தார். பின்னர் ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளர் ஆனபோதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டதாக கூறிய டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற விதியை எந்த காலத்திலும் மாற்ற முடியாது என்கிற கூடுதல் வார்த்தையையும் சேர்த்து பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பான அதிமுகவின் சட்ட திட்டத்தை ஜெயலலிதா மேலும் வலுவாக்கியதாக கூறினார்.
ஆனால் இந்த சட்டவிதிகளை மாற்றி குறுக்கு வழியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக முயற்சிகள் நடப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். இதற்காக அக்கட்சி நிர்வாகிகள் 25 லட்ச ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாய் வரை விலைபேசப்படுவதாகவும் டிடிவி தினகரன் புகார் தெரிவித்தார். அதிமுகவின் கொள்கை பிடிப்பான தொண்டர்கள், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அமமுகவில்தான் உள்ளதாக கூறிய டிடிவி தினகரன், அமமுக நிச்சயம் தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்றார். அவ்வாறு ஆட்சியை பிடிக்கும்போது, அதிமுகவை தாங்கள் நிச்சயம் மீட்டெடுப்போம் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்தார்.







