எடப்பாடி பழனிசாமி வசம் இருந்தால் இரட்டை இலை அதன் மதிப்பை இழந்துவிடும்- டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி வசம் இருந்தால் இரட்டை இலை அதன் மதிப்பை இழந்துவிடும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ராயப்பேட்டையில்…

எடப்பாடி பழனிசாமி வசம் இருந்தால் இரட்டை இலை அதன் மதிப்பை இழந்துவிடும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கப்பார்ப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகக் கூறிய அவர், காவல்துறையை சுயமாக இயங்கவிட வேண்டும் என தெரிவித்தார். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அக்கட்சியினர் வைக்கும் கோரிக்கை குறித்து பதில் அளித்த டிடிவி தினகரன், அமைச்சரானால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை உதயநிதி ஸ்டாலின் சரிசெய்துவிடுவாரா எனக் கேள்வி எழுப்பினார்.

அமமுக சுயமாக சிந்தித்து செயல்படும் இயக்கம் என்று கூறிய டிடிவி தினகரன், நயவஞ்சக கூட்டத்தில் ஒரு போதும் அமமுக சேராது என்றார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்டது தவறு என்பதை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உணர்ந்துவிட்டதாகவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.

அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் அதிமுக , சின்னம் தவறானவர்கள் கையில் இருப்பதை மக்கள் உணர்வார்கள் எனத் தெரிவித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி வசம் இருந்தால்  இரட்டை இலை சின்னம் தனக்கான மதிப்பையும், மரியாதையையும் இழந்துவிடும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.