பாரத் ராஷ்ட்ரிய சமிதி உதயம்: சந்திரசேகர ராவ் முன்பு உள்ள சவால்கள் என்ன?

இந்தியாவில் தேசிய கட்சிகளாக இதுவரை 8 கட்சிகளே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் இணையும் இலக்கோடு ஒரு புதிய கட்சி உருவெடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் 2.0 வெர்சனாக…

இந்தியாவில் தேசிய கட்சிகளாக இதுவரை 8 கட்சிகளே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் இணையும் இலக்கோடு ஒரு புதிய கட்சி உருவெடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் 2.0 வெர்சனாக அவதாரமெடுத்துள்ளது பாரத் ராஷ்ட்ரிய சமிதி.

பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரான கே.சந்திரசேகரராவ் தெலங்கானா மாநிலத்தின் முதல் முதலமைச்சராக கடந்த 2014ம் ஜூன் 2ந்தேதி பொறுப்பேற்றார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக அவர் அந்த பதவியில் நீடித்து வருகிறார். இனி கே.சி.ஆரை பிரதமர் ஆக்கி பார்ப்பதே அவரது கட்சியினரின் இலக்கு என்று கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தேசிய அரசியலில் தனது குரலை வலுவாக பதிவு செய்து வந்தார் சந்திரசேகர ராவ்.  இந்நிலையில் தற்போது தமது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என்கிற தேசிய கட்சியாக மாற்றியுள்ளதன் மூலம் தாம் ஒரு மாநிலத்திற்கான தலைவர் அல்ல ஒரு தேசத்திற்கான தலைவர் என்பதை அடையாளப்படுத்த முயன்றுள்ளார் கே.சி.ஆர். இதற்கான அறிகுறியாக சமீபகாலமாகவே பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துவந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 7ந்தேதி டெல்லியில் நடைபெற்ற நிதிஆயோக்கின் 7வது ஆட்சிமன்ற குழு கூட்டத்தை புறக்கணித்த சந்திரசேகரராவ் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இந்த கூட்டத்தால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை என கடிதத்தில் காட்டமாக விமர்சித்த கே.சி.ஆர்,  மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சத்துடன் நடத்துவதாக பகிரங்கமாக குற்றச்சாட்டினார். தேசிய அளவில் பாஜகவிற்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்க சந்திப்புகளை நடத்தி வந்த சந்திரசேகரராவ், கடந்த மாதம் 1ந்தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமாரை சந்தித்தார். ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும் பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக இல்லாத பாரதத்தை அமைப்போம் என்று முழங்கிய சந்திர சேகரராவ் தற்போது பாரத் ராஷ்ட்ரிய சமிதியை தொடங்கியுள்ளார். இந்த விழாவில் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு சிந்தனையுள்ள கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என்று மாற்றுவதற்கான தீர்மானம் அக்கட்சியின் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டது, அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பது ஆகியவை மட்டுமே தற்போது நடைபெற்றுள்ளன. பாரத் ராஷ்ட்ரிய சமிதி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கு இன்னும் பல நடைமுறைகள் உள்ளன.

ஒரு கட்சி தேசிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட கீழ்க்கண்ட 3 தகுதிகளில் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்.

1) குறைந்தது 4 மாநிலங்களில் கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தல்களில் பதிவான செல்லுபடியான வாக்குகளில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். அத்துடன் மக்களவையில் குறைந்தது 4 எம்.பிக்களையாவது பெற்ற கட்சியாக இருக்க வேண்டும்.

2) கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள இடங்களில் குறைந்தது 2 சதவீத இடங்களில் வென்றிருக்க வேண்டும். அந்த இடங்கள் குறைந்தது 3 மாநிலங்களிலிருந்து பெறப்பட்டவையாக இருக்க வேண்டும்

3) தேசிய கட்சிக்கான அங்கீகாரம் பெற விரும்பும் கட்சி குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களிலாவது மாநிலக்கட்சி என்கிற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையத்தால் பெற்றிருக்க வேண்டும்.

காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 8 கட்சிகள் மேற்கூறிய தகுதிகளில் ஒன்றையோ அல்லது அதற்கு மேலேயோ பெற்று தேசிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேசிய கட்சி என்கிற அங்கீகாரத்தை கடைசியாக  தேசிய மக்கள் கட்சி பெற்றது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 7ந்தேதி தேசிய கட்சி என்கிற அங்கீகாரத்தை தேசிய மக்கள் கட்சி பெற்றது. முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா தொடங்கிய இந்த கட்சிதான் வடகிழக்கு மாகாணத்திலிருந்து தேசிய கட்சி என்கிற அங்கீகாரத்தை பெற்ற முதல் மாநில கட்சி.

இப்படி தேசிய கட்சி என்கிற அங்கீகாரத்தைப் பெற மாநிலங்கள் கடந்த தேர்தல் வெற்றிகளை பதிவு செய்ய வேண்டி நிபந்தகனைகள் உள்ள நிலையில், அடுத்து வரக்கூடிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் கே.சந்திரசேகர ராவுக்கு மிகவும் முக்கியமானது. கடந்த 2001ம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து தெலுங்கு பேசும் மக்கள் வாழும் தெலங்கானா, ஆந்திராவைத் தாண்டி  வேட்பாளர்களை டிஆர்எஸ் நிறுத்தியதில்லை. எனவே அடுத்து நடைபெற உள்ள கர்நாடகா மற்றும் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிகளை ஈட்டுவது சந்திரசேகரராவ் முன்பு உள்ள பெரும் சவலாக கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தன்னை தேசிய தலைவராக முன்னிறுத்த முயற்சிக்கும் கே.சந்திரசேகர ராவ் சொந்த மாநிலத்தில் பலத்தை நிரூபிப்பது மிக மிக அவசியம். 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் நிலையில் அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை ஏற்படாமல் ஆட்சியை தக்க வைப்பது சந்திர சேகரராவ் கட்சிக்கு உள்ள மற்றொரு சவால்.  இந்த சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலையை திசை திருப்புவதற்காகவே தன்னை ஒரு தேசிய தலைவராக கே.சி.ஆர் முன்னிறுத்தி வருகிறார் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போதே தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றாக புதிய அணியை தோற்றுவிக்க கே.சந்திரசேகரராவ் முயற்சித்தார். இதற்காக 2018ம் ஆண்டிலிருந்தே பேச்சுவார்த்தைகளை தொடங்கினார். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்நிலையில் மீண்டும் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார் சந்திரசேகரராவ். பிரதமர் வேட்பாளராக களம் இறங்கும் ஆவலில் பல தலைவர்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில், 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் தம்மை முன்னிறுத்தும் வகையில் பாஜகவிற்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்குவது சந்திர சேகரராவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.