போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் இன்று நிறைவேறவில்லை

போக்குவரத்துகழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரிக்கும் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் 14வது ஊதிய ஒப்பந்தம் இன்று நிறைவேற்றப்படவில்லை  என  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  சென்னை குரோம்பேட்டையில்…

போக்குவரத்துகழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரிக்கும் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் 14வது ஊதிய ஒப்பந்தம் இன்று நிறைவேற்றப்படவில்லை  என  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் ஆறாவது கட்ட
பேச்சுவார்த்தை நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ,
அங்கீகரிக்கப்பட்ட 66 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நல இணை
ஆணையர் லெட்சுமி காந்தன் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர் ,
தொழிலாளர்களின் சில கோரிக்கைகள் தொடர்பாக நிதித்துறை ஒப்புதல் பெற வேண்டி
இருப்பதால் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை என்றும் மீண்டும் பேச்சு வார்த்தை
நடைபெறும் எனவும் தெரிவித்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் ‘பே மேட்ரிக்ஸ் ‘ கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர்,  5 சதவீத ஊதிய உயர்வு செப்டம்பர் 2019 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றார். கடந்த ஆட்சியில் தொழிலாளர் ஊதிய விகிதம் ஜூனியர் சீனியர் வேறுபாடின்றி மாற்றி அமைக்கப்பட்டதை களைய பே மேட்ரிக்ஸ் அமல்படுத்த தொழிலாளர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 4 ஆண்டு காலமாக உயர்த்தக் கூடாது என்ற
தொழிற்சங்கத்தினர் கோரிக்கை தொடர்பாக நிதித் துறை ஒப்புதல் பெற வேண்டி
இருப்பதால் இன்று ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை
நடக்கும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்குவது குறித்து தற்போதைய நிதி
சூழல் காரணமாக நீண்ட விவாதத்திக்கு பிறகே உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் சண்முகம், இன்றைய பேச்சுவார்த்தையில் 99 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.  ஊதிய ஒப்பந்தத்தை  4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதாக பேச்சுவார்த்தை காலத்தை உயர்த்தலாமா என்ற யோசனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என  போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் தாங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் சண்முகம் தெரிவித்தார்.

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது,  போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க ஒரே தீர்வு அரசு ஊழியர்களாக்குவதுதான் எனக் கூறிய அவர், அதன் மூலம்தான் ஊதியமும் , ஓய்வூதியமும் பட்ஜெட் மூலம் ஒதுக்கப்பட்டு பிரச்சனை இன்றி கிடைக்கும்  எனத் தெரிவித்தார்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்றைய பேச்சுவார்த்தை குறித்து எடுத்துக் கூறி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்வோம் என்றும் கமலக் கண்ணன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.