பிரியாணி படத்தில் கார்த்தியையும், அஞ்சான் படத்தில் சூர்யாவையும் பாட வைத்தேன் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். நடிகர் சூர்யா தயாரிப்பில் அவரின் தம்பி கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாஸ், சூரி, இயக்குநர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மண்சார்ந்து உருவாகியுள்ள விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரைக்கு வரும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘தென் மாவட்ட பின்னணியில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக ‘விக்ராந்த்’’
இந்த நிகழ்வில் பேசிய யுவன் சங்கர் ராஜா, தனக்குப் படம் நிறையப் பிடித்துள்ளதாகவும், அனைவரும் சிறப்பாக நடித்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஒரு குடும்பமாகத் தான் உள்ளோம் எனக் கூறிய அவர், பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
பிரியாணி படத்தின் போது கார்த்தியைப் பாட வைத்தேன் எனக் கூறிய அவர், அதே போல் அஞ்சான் படத்தின் போது சூர்யாவைப் பாட வைத்தேன் எனக் கூறினார். மேலும், இசையால் இவ்வளவு பேரை ரீச் செய்துள்ளது மகிழ்ச்சி தான் எனக் கூறிய அவர், மனைவி சொல்வதை எல்லாரும் பாலோ செய்கிறார்கள் நானும் அதைத் தான் செய்கிறேன். மதுரையில் விரைவில் ஒரு இசைக் கச்சேரி செய்ய உள்ளேன் எனக் கூறினார்.








