ஒடிசா ரயில் விபத்து எதிரொலி – தமிழ்நாட்டில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு; அரசு நிகழ்ச்சிகள் ரத்து!!

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு…

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : இது முதல்முறை அல்ல… – இதுவரை 5 முறை விபத்தை சந்தித்துள்ள கோரமண்டல் எக்ஸ்பிரஸ்!!

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (03.06.2023) ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகழும் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.”

இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.