லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் ‘தி லெஜன்ட்’ பான் இந்தியா படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
‘தி லெஜண்ட்’ படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன. ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.இன்று மாலை 7 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் ‘தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் & இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில், முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலர் பங்கேற்கவுள்ளனர். இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.