துபாய், அபுதாபி, சுவிட்சர்லாந்து நாடுகளை தொடர்ந்து ஜெர்மனியில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் 50 தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துவிட்டு நேற்று சென்னை திரும்பியுள்ளர். துபாய், அபுதாபி நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணமாகி முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருந்தார்.
இதையடுத்து வரும் ஜூலை மாதம் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடு தொடர்பான மாநாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல திட்டமிடுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜெர்மனியில் மே 30ம் தேதி (நாளை) முதல் ஜூன் 2ம் தேதி வரை நடைபெறும் Hannover Messe -2022 என்ற தொழில் கண்காட்சியில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரங்கு அமைக்கின்றது. ஆற்றல், உற்பத்தி, நெட்வொர்க்கிங், லாஜிஸ்டிக் துறைகளில் முதலீட்டை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் அலுவலர்கள், தொழில்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர்.








