கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு கிலோ தக்காளியின் விலை இன்று 100 ரூபாயை தொட்டிருக்கிறது.
தக்காளி வரத்து குறைவு, மழைப்பொழிவு போன்ற காரணங்களால் கோயம்பேடு சந்தையில் 20ஆவது நாளாக தக்காளியின் விலை தொடர்ந்து இன்றும் அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ. 90க்கு நேற்று விற்கப்பட்ட நிலையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து ரூ. 100க்கு விற்கப்படுகிறது.
நாட்டு தக்காளி நேற்று ரூ. 85 க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 95க்கு விற்பனையாகிறது. ஆப்பிள் தக்காளி நேற்று ரூ. 90 க்கு விற்பனையாகிய நிலையில், இன்று ரூ. 100க்கு விற்பனையாகிறது. மழைப்பொழிவு காரணமாக பல காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அந்தவகையில் நேற்று ரூ. 110க்கு விற்கப்பட்ட பீன்ஸ், இன்று 10 ரூபாய் அதிகரித்து ரூ.120க்கு விற்கப்பட்டது. ரூ.80க்கு விற்கப்பட்ட அவரைக்காய் இன்று ரூ. 90க்கு விற்கப்பட்டது.
சில்லறை விற்பனையைப் பொறுத்தவரை, கோயம்பேட்டில் நாட்டு தக்காளி நேற்று ரூ. 95க்கு விற்கப்பட்டது. இன்று ரூ. 100 க்கு விற்பனையாகிறது. ஆப்பிள் தக்காளி ரூ. 100க்கு நேற்று விற்பனையான நிலையில், இன்று ரூ.110 க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ. 120க்கு விற்பனையான பீன்ஸ் இன்று ரூ.130க்கும், ரூ. 80க்கு விற்பனையான அவரைக்காய் இன்று ரூ. 90க்கும் விற்பனையாகி வருகிறது.
15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 950 முதல் 1,050 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், சில்லறை விற்பனையில் 15 முதல் 20 சதவீதம் விலை அதிகரித்து விற்கப்படுகிறது. பொதுவாக கோயம்பேடு சந்தைக்கு 80% தக்காளி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அசானி புயலைத் தொடர்ந்து தொடர் மழை காரணமாக ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளியின் தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.








