சைரஸ் மிஸ்ட்ரியை டாடா குழுமத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது செல்லும் என்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இதனை தொழிலதிபரும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா வரவேற்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். நமது நீதித்துறையின் மதிப்பு மற்றும் நெறிமுறைகளை இது மேலும் வலுப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்ட்ரி அதிரடியாக நீக்கப்பட்டார்.
2016 டிசம்பர் மாதம், மிஸ்ட்ரி குடும்பத்தின் ஆதரவு பெற்ற இரண்டு முதலீட்டு நிறுவனங்களான சைரஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியவை மிஸ்ட்ரி நீக்கப்பட்டதற்குத் தடை கோரி, தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகியது. அதை விசாரித்த தீர்ப்பாயம் அவரை மீண்டும் தலைவராக நியமிக்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சைரஸ் மிஸ்ட்ரி நீக்கத்திற்கு ஒப்புதல் வழங்கியது.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி சைரஸ் மிஸ்ட்ரியின் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.








