ஒலிம்பிக்கில் வில்வித்தை தனிநபருக்கான தரவரிசை சுற்றில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9வது இடத்தை பிடித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் என்பது உலக அளவில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு கனவாக இருக்கிறது. ஒலிம்பிக் என்பது வெறும் போட்டி மட்டுமல்ல அது விளையாட்டு வீரர்களின் நெடுநாள் உழைப்புக்கு கிடைக்கும் ஒரு சிறந்த அங்கீகாரம். கொரோனா பெரும் தொற்று அனைவரின் வாழ்வையும் புரட்டி போட்டிருக்கிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. தொற்று பரவல் பயம் ஒருபுறம் இருக்க, ஒட்டுமொத்த உலக வீரர்களின் கனவுகளை நினைவாக்கும் நாளாக இருக்கிறது இன்றைய நாள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அமெரிக்காவைச் சேர்ந்த 613 வீரர்களும், ஜப்பானை சேர்ந்த 552 வீரர்களும், சீனாவை சேர்ந்த 406 வீரர்களும், ஜெர்மனியை சேர்ந்த 425 வீரர்களும், இந்தியாவைச் சேர்ந்த 125 வீரர்களும் களத்தில் இறங்க காத்திருக்கின்றனர். ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள, இந்தியாவில் இருந்து மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையில் தகுதிநிலை தரவரிசை சுற்றில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். காலை 5.30 மணிக்கு வில்வித்தை போட்டிக்கான தகுதிநிலை சுற்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 663 புள்ளிகள் எடுத்து 9வது இடத்தை பிடித்தார். முதல் மூன்று இடத்தை கொரிய வீராங்கனைகள் பிடித்தனர். முதல் இடத்தை பிடித்த தென் கொரியாவின் அன் சான் 680 புள்ளிகளை பெற்றார். கடந்த முறை ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட தீபிகா குமாரி, தனிநபர் தகுதிப்பிரிவில் 20வது இடத்தை பிடித்திருந்தார்.