தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை அறிமுகம் செய்து வைத்த அக்கட்சியின் தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். பிப்ரவரியில் கட்சி தொடங்கியதும், இந்த மக்களவைத் தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் எனவும் அவர் கூறினார். மேலும் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தனது இலக்கு எனவும் தெரிவித்தார்.
#தமிழகவெற்றிக்கழகம் #TVKMembershipDrive #TVKVijay pic.twitter.com/e4DqN18sn2
— TVK Vijay (@tvkvijayhq) March 8, 2024
தொடர்ந்து தனது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், முதற்கட்டமாக கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதே இலக்கு என தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். இதனிடையே இன்று (மார்ச் 8) உறுப்பினர்கள் சேர்க்கைக்கான செயலி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. உறுப்பினர் சேர்க்கைக்கான அணியை நியமித்து நேற்று (மார்ச் 7) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டு அதற்கான க்யூஆர் கோடு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முதல் உறுப்பினராக, கட்சியின் தலைவர் விஜய் இணைந்துள்ளார். மேலும் அவர் இந்த செயலி குறித்து விளக்கிய வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







