பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ. 5-ம், டீசல் மீதான கலால் வரியில் ரூ.10-ம் குறைப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கும் வந்துள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5 ரூபாய் 26 காசுகள் குறைந்து 101 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 16 காசுகள் குறைந்து 91 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.







