கோடானாகோடி ரசிகர்களால் கொண்டாப்படும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தன்னுடைய 36 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியா நகர் தான் மெஸ்ஸிக்கு சொந்த ஊர். தாய் செலியா பகுதி நேர தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் தந்தை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். குடும்பத்தின் மூன்றாவது ஆண் குழந்தைதான் மெஸ்ஸி; வீட்டில் அனைவருக்குமே கால்பந்து விளையாட்டின் மீது அலாதி பிரியம்.
அப்பாவும் கால் பந்துகோச் என்பதால் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே பயிற்சியளிக்க ஆரம்பித்து விட்டார். நியூவெல்ஸ் ஓல்ட் பாய் என்ற உள்ளூர் ஃபுட்பால் கிளப்பின் டி -ஷர்ட்டை உறவினர் ஒருவர் வாங்கிக் கொடுத்ததின் ஆரம்பம்தான் மெஸ்ஸியின் அசாத்திய கால்பந்து பயணத்தின் தொடக்கம். அதனைத்தொடர்ந்து கால்பந்தின் மீது இனம் புரியாத காதல் உருவாக ஐந்தாவது வயதில் கிராண்டோலி என்ற கால்பந்து கிளப்பில் இணைந்தார். சிறு வயதில் மெஸ்ஸிக்கு கூச்சசுபாவம் அதிகம்; யாரிடமும் அதிகமாக பேச மாட்டார். யாராவது கோபப்பட்டால் கூட அவர்களுக்கு பதில் கொடுக்கமாட்டார்.
2012 ம் ஆண்டில் 91 கோல்களை அடித்து கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். 700க்கும் மேற்பட்ட கோல்களை அடித்திருக்கும் மெஸ்ஸி கால்பந்தின் உயரிய விருதாக பார்க்கப்படும் தங்க கால்பந்து கோப்பையை பல முறை மெஸ்ஸி வென்று இருக்கிறார்.
இவரின் போட்டியாக பார்க்கப்படுவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர்களுக்கு இடையேயான போட்டியானது கால்பந்து உலகில் உச்சபட்ச கவனத்துடன் கண்காணிக்கப்படுகிறது. மெஸ்ஸி கடந்த 2017 ம் ஆண்டு அன்டோனெல்லா ரோகுஸ்ஸோவை திருமணம் செய்து கொண்டார். மாடல் அழகியான இவர் சில தொழில்களையும் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
2021 முதல் 2023 ஜூன் வரை மெஸ்ஸியை பிஎஸ்ஜி அணி ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது ஒப்பந்தம் முடிவது மட்டுமின்றி சமீபத்தில் சவூதி அரேபியாவுக்கு அணியின் அனுமதியின்றி மெஸ்ஸி சென்றதால் அணி அவரை இடைநீக்கம் செய்திருந்தது. இதுபோன்ற கருத்து வேறுபாடுகளினாலும் மெஸ்ஸி அணியில் இருந்து விலகுகிறார் என்று கூறப்படுகிறது. ஆண்டுக்கு 500 பில்லியன் பவுண்டு என இரண்டு ஆண்டுகளுக்கு மெஸ்ஸியை அல் – ஹிலால் அணி ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை பிஎஸ்ஜி கிளப்பின் பயிற்சியாளர் கிறிஸ்டோப் கால்டியர் உறுதி செய்திருக்கிறார். பிரான்ஸில் நடைபெற்ற லீக் 1 ஆட்டத்தில் கிளர்மான்ட் அணியுடன் பிஎஸ்ஜி அணி மோதியது. இதுவே மெஸ்ஸி, பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கடைசி ஆட்டமாகும்.
அணி மாறினாலும், மெஸ்ஸியின் மவுசு என்றும் குறைவதில்லை. இன்று பிறந்தநாள் கொண்டாடும் கால்பந்து உலகின் ஜாம்பவான் மெஸ்ஸிக்கு உலகமெங்கும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.







