ஜெயங்கொண்டம் அருகே வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதற்காக சென்ற முதியவரிடம் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ் கேட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் சேமிப்பில் இருந்த பணத்தை எடுக்க வங்கியில் காசோலை எழுதி கொடுத்து பணம் கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த அதிகாரி நீங்கள் இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், ஆகையால் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளனர்.
மேலும், கோவிந்தன் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கி வருமாறும் கூறியுள்ளனர். கிராம நிர்வாக அதிகாரி சான்று வழங்கிய போதும், அதனை ஏற்காத அதிகாரிகள் தாசில்தாரிடம் சான்றிதழ் வாங்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால், 72 வயதான கோவிந்தன் தற்போது ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வாங்க மனு அளித்தார்.
இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி ஒளிப்பரப்பிய 1 மணி நேரத்திற்குள்ளேயே, கோவிந்தனை அழைத்துப்பேசிய வங்கி அதிகாரிகள் தங்கள் மீதுள்ள தவறை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து சுமூக தீர்வு காண்பதாக உறுதி அளித்த வங்கி அதிகாரிகள், கோவிந்தனின் வங்கிக் கணக்கில் உள்ள தொகை வழங்குவதாக உறுதி அளித்தனர்.








