அக்டோபர் 30-ம் தேதி நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது.
இந்நிலையில், துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் பதவியில் காலியாகவுள்ள 26 இடங்கள், வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவியில் காலியாகவுள்ள 25 இடங்கள், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் பணியில் காலியாகவுள்ள 13 இடங்கள், ஊரக வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநர் பணியில் 7 இடங்கள், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் பணியில் காலியாகவுள்ள 3 இடங்கள் என மொத்தமாக 92 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 1 முதல் நிலை தேர்வானது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 22-ம் தேதி வரை பெறப்பட்டது. மேலும் தேர்வு அக்டோபர் 30-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டி என் பி எஸ் சி குருப் 1 முதல் நிலைத்தேர்வு, சில நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.







