கூழாங்கல் படத்திற்கு புதுச்சேரி அரசு சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. அத்திரைப்படத்தின் இயக்குனர் வினோத்ராஜ் விருதை பெற்றுக்கொண்டார்.
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் நடத்தும் “இந்திய திரைப்பட விழா – 2022” புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் கலையரங்கில் இன்று தொடங்கியது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார். இன்று தொடங்கிய திரைப்பட விழா வரும் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனர் பி.வினோத்ராஜ்-ற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.
நாள்தோறும் மாலை 6 மணிக்கு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. முதல் நாளான இன்று புதுச்சேரி அரசு சார்பில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள கூழாங்கல் திரைப்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து நாளை நாட்யம் என்ற தெலுங்கு திரைப்படமும், 11ம் தேதி சன்னி என்ற மலையாள படம், 12ம் தேதி கல்கொக்கோ என்ற வங்காள மொழி படம், கடைசி நாளான 13ம் தேதி ஆல்பா பீட்டா காமா என்ற இந்தி படமும் திரையிடப்பட உள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் வினோத்ராஜ், நாடகத்தில் இருந்து வந்தவன் நான், நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் விருது கிடைத்துள்ளது அவருடைய ஆசிர்வாதமாக பார்க்கிறேன். திரைப்படங்கள் வியாபார நோக்கில் மட்டும் இல்லாமல் மக்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு சேர்ப்பதாகவும் இருக்க வேண்டும். சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் விருது கிடைத்துள்ளது கூடுதல் பொறுப்பும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. புதுச்சேரி அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.







