கோவையில் தொடங்கியுள்ள டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஜூலை 12-ம் தேதி வரை கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும்.போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும்.
இறுதிப் போட்டி 12-ம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளது. கோயம்புத்தூர் நவ இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் களம் இறங்கின. அதில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த கோவை கிங்ஸ் இறுதியாக 179 ரன்கள் குவித்தது.
கோவை கிங்ஸ் அணியை தொடர்ந்து களம் இறங்கிய திருப்பூர் தமிழன்ஸை பொறுத்தவரை துஷார் ராஜேஷ் மட்டும் தனி ஆளாக போராடினார். 33 பந்துகளை சந்தித்திருந்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 33 ரன்களை சேர்த்த நிலையில் அவுட் ஆனார். இவருக்கு அடுத்தப்படியாக விஷால் வைத்தியா 16 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அஜித் ராம் 11 ரன்களும், புவனேஷ்வரன் 12 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆன நிலையில் 109 ரன்களுக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி ஆல் அவுட் ஆனது. பவுலிங்கை பொறுத்தவரை கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.







