மயிலாடுதுறை அருகே திரௌபதி அம்மன் ஆலய திருவிழாவில் தீமிதித்த பக்தர்கள் சாட்டையடி பெற்று சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த வில்லியநல்லூரில் பிரசித்தி பெற்ற
திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சுவாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்றது.
.விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்று (ஜூன் 12) வெகு விமர்சையாக
நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் காவிரி கரையில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
16 அடி அலகு குத்தி தீமிதித்த காட்சிகள் பக்தர்களை பரவசமடைய செய்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய திரௌபதி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாட்டை அடி நிகழ்வு நடைபெற்றது. சாட்டை அம்பாளுடன்
பிறந்ததால் இதனைக் கொண்டு தீ மிதித்த பக்தர்களுக்கு சாட்டை அடிக்கும் போது
தீவினைகள் மற்றும் பில்லி, சூனியம் உள்ளிட்டவை விலகிப் போகும் என்பது ஐதீகம்.
இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் பாகவதரிடம் சாட்டையடி பெற்று சுவாமி
தரிசனம் செய்தனர்.







