TN Weather Update | டிச. 2,3 தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டிசம்பர் 2,3 -ல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (27-11-2023) காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான்…

டிசம்பர் 2,3 -ல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (27-11-2023) காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (28-11-2023) காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில்,  இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் டிசம்பர் 2,3 -ல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,  ”தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். புயலாக கரையை கடக்குமா? எங்கு கரையை கடக்கும்? என்பதை இனி வரும் நாட்களில் முறையாக கண்காணித்த பிறகே கூற இயலும்.

வங்கக் கடலில் டிச.2ம் தேதி புயல் உருவாகக்கூடும்.  தமிழகம், புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் டிச.2, 3 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும்.

அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும். வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 8% குறைவாக பெய்துள்ளது.”  இவ்வாறு அவர் கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.