பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தமிழ்நாடு அரசு தடை

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க, விழா கொண்டாட தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.   கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களின்போது மக்கள் அதிக அளவில் ஒரே இடத்தில் கூடியதால் கொரோனா தொற்று…

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க, விழா கொண்டாட தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.  

கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களின்போது மக்கள் அதிக அளவில் ஒரே இடத்தில் கூடியதால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள விழாக்களுக்கு தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வரும் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மற்றும் இதர இடங்களில் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படவுள்ள மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின்போது, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.