காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த, ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன்; இந்துஸ் முதல் வைகை வரை என்ற புத்தகம் திராவிடத்தின் பல்வேறு சிறப்புகளை சொல்லும் புத்தகமாகும்.
முதலமைச்சராகப் பதவி ஏற்றபின்னர் மு.க.ஸ்டாலின் முதன் முதலாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இன்று அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன்; இந்துஸ் முதல் வைகை வரை என்ற புத்தகத்தைப் பரிசளித்தார்.
இந்த புத்தகம் 2019ம் ஆண்டு வெளியான போதே பெரும் வரவேற்பை பெற்றது. சோனியா காந்திக்கு , மு..க.ஸ்டாலின் பரிசளித்ததன் வாயிலாக மீண்டும் இந்த புத்தகம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. வரலாற்று ஆய்வாளரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் இப்போது ஒடிசா முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக இருக்கிறார். இவர் பல ஆண்டுகால ஆய்வுக்குப்பின்னர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை தமிழ்நாட்டில் உள்ள ரோஜா முத்தையா நூலகம் வெளியிட்டிருக்கிறது.

புத்தகத்தில் அடங்கியுள்ள அம்சங்களை இப்போது சுருக்கமாக பார்க்கலாம். இந்த புத்தகம், இந்திய வரலாற்றில் இரண்டு புதிர்களுக்கு விடையளிக்கும் வகையில் இருக்கிறது. முதலாவதாக சிந்து சமவெளி மக்கள் தங்களின் கடைசி காலகட்டத்தில் எங்கு சென்றனர் என்பது குறித்து விவரிக்கிறது. இரண்டாவதாக சங்க கால இலக்கியத்தின் தோற்றம் குறித்தும் அவற்றை எழுதியவர்கள் யார் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கிறது.
சங்க இலக்கியம் வலுவான செம்பு கோட்டைகள் குறித்தும் உயர்ந்த மாறுபட்ட நிலப்பரப்புகள் குறித்தும், இமாலயம் குறித்தும் எழுதியிருக்கிறார். இடங்களின் பெயர்கள், டிஎன்ஏ ஆய்வுகள் , இருப்பிடங்களின் வடிவங்கள், நகரங்களின் கட்டமைப்பு ஆகியவை பற்றியும் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் 17 அத்தியாயங்களுடன், மூன்று பிரிவுகளாக உள்ளன.
டிஎன்ஏவின் அடிப்படை, இடப்பெயர்வுகள், இடத்தின் பெயர் மற்றும் திராவிட கருதுகோள் ஆகியவற்றை விரிவாக முன் வைக்கிறது. பானைகளின் பாதை வழியே திராவிட ஆதாரம், இலக்கிய தொடர்புகள், இப்போதைய புவியல் தகவல்கள் ஆகியவற்றை இரண்டாவதாக விவரிக்கிறது. மூன்றவதாக ஆய்வுகட்டுரைகள் இடம் பெற்றுளனர். நகரத்தார் மற்றும் கொங்கு வேளாளர் சமூகத்தில் இருந்து கிடைத்த ஆவணங்களின் தகவல்களை பாலகிருஷ்ணன் இதில் குறிப்பிட்டுள்ளார்.
சிந்து சமவெளி பகுதியில் இருந்து ஆதிச்ச நல்லூர் வரையில் வைகை வழியே பானை பாதை தொடர்புகளை பாலகிருஷ்ணன் விவரிக்கிறார். புதிய மண்பாண்ட துண்டுகளை ஆதாரமாக கொண்டு இதனை அவர் விளக்குகிறார்.
மொகஞ்சதோராவில் கிடைத்த முத்திரைகளில் செபு காளை என்ற காளை மாடு குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். இதற்கும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பு உள்ளதை பாலகிருஷ்ணன் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். திராவிடர்கள், தமிழர்களின் சிறப்புகளை சொல்லும் இந்த புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது சோனியா காந்திக்கு பரிசாகக் கொடுத்துள்ளார்.







