கூடங்குளம் அரசு மருத்துவமனையில் 1 கோடி ரூபாயில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
கொரோனா 3 வது அலை வருவதற்கு முன்பு அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் இங்கு அமைக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யமுடியும் என்றும், இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மூலம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் ஆக்சிஜன் வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. வரும் 10 தினங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







